இலங்கையில் மூடப்படும் நிலையில் உள்ள 95 வைத்தியசாலைகள்!

#SriLanka #Hospital #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் மூடப்படும் நிலையில் உள்ள  95 வைத்தியசாலைகள்!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு,  95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.  

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (8.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படுகிறது. 

விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட சுமார் 1500 வைத்தியர்கள் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்துக்குள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இது நாட்டிலுள்ள மொத்த வைத்தியர்களில் நூற்றுக்கு 5 சதவீதமாகும். 2022இல் காணப்பட்ட மொத்த வைத்தியர்களில் 5 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

images/content-image/1699539577.jpg

அடுத்து நாம் எதிர்கொள்ளவுள்ள அபாயம் யாதெனில் வைத்தியர்களுக்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள 5000 பேர் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருக்கின்றனர். எனவே இவற்றை தடுப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த வைத்திய கட்டமைப்பிலிருந்து 5000 பேரை ஒரே சந்தர்ப்பத்தில் இழக்க நேரிட்டால் அது நூற்றுக்கு 25 சதவீத இழப்பாகும். 

 ஒரே சந்தர்ப்பத்தில் வைத்திய கட்டமைப்பில் 25 சதவீத மனித வலுவை இழக்க நேரிட்டால் அதனை இலகுவில் ஈடுசெய்யவோ, தாங்கிக்கொள்ளவோ முடியாது.  

இந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் மதிப்பீடுகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

சேவை வழங்கிக்கொண்டிருக்கும் ஓரிரு வைத்தியர்களும் இவ்வாறு வெளியேறிவிட்டால் அந்த வைத்தியசாலைகளை மூடுவதைத் தவிர மாற்று வழியில்லை. அத்தோடு 150 வைத்தியசாலைகளில் எதிர்பார்க்கும் சேவைகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. 

 இதே போன்று மேலும் 168 வைத்தியசாலைகள் இவ்வாறு சேவைகள் முடங்கக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாவிட்டால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம் என எச்சரிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4