தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.
இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது இந்திய சமூகத்தினருடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறும்போது, "பிரதமர் ரிஷி சுனக், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் இந்து சமூகத்தினருடன் இணைந்து கொண்டாடினார். இது இருளுக்கு எதிராக ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.
இந்த வார இறுதியில் கொண்டாடும் தீபாவளியை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரிஷி சுனக், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.