யாழ்ப்பாணம் பொலிகண்டி அகதி முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் : அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை!
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக நீடித்து வந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் 1990 ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்து வந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பங்களின் அழைப்பின் பேரில் நேற்று (18.11) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த முகாம்களில் வசிக்கும் பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அக் குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பலர் டெங்கு தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர் .

இதன் அடிப்படையில் குறித்த மக்களின் தற்போதைய தேவை தொடர்பில் மெசிடோ நிறுவனத்தினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த முகாம்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் சில மக்களுக்கு காணிகள் தமது சொந்த நிலங்களை விட வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட போதிலும் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கத்தால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் இதனாலேயே குறித்த மக்கள் அகதி முகாமில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்காலிகமாக வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதற்கான உதவிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்