தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை : ஜீவன் தொண்டமான்!
தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கவும் செலவைக் குறைக்கவும் அரச-தனியார் பங்காளித்துவத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கான சூத்திரம் ஒன்று தேவைப்படுவதாகவும், அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்மொழியப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு நியாயமான விலையில் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.