அடிக்கடி தடைப்படும் பருத்தித்துறை - கொழும்பு பஸ் சேவை! பயணிகள் விசனம்

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போவிலிருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேரூந்து திருத்தம் காரணமாக இன்று காலை சேவையில் ஈடுபடவில்லை.
இதனால் கொழும்பில் முக்கிய தேவை கருதி பிரயாணம் செய்யும் நோக்கோடு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை திட்டமிட்ட நேரத்தின் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே பருத்தித்துறையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மாற்று பேரூந்து கொடிகாமம் வரை சென்று அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பேரூந்து ஒன்றில் பயணிகள் மாற்றப்பட்டனர்.
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேரூந்து சேவையானது கடந்த மூன்று மாத காலத்தில் முன்னறிவித்தலின்றி பலதடவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சங்கங்கள் அதிகரித்துள்ளதேயொழிய மக்கள் சேவை சரியான முறையில் இல்லை என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முன்னைய காலங்களைப் போன்று பேரூந்துகள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் இதனாலேயே அடிக்கடி பழுதடைவதாக பேரூந்து சாரதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேரூந்துகளுக்கான உதிரிப் பாகங்கள் விலையேற்றம் மற்றும் அதனை கொள்முதல் செய்வதில் உள்ள இடர்பாடு காரணமாகவே பேரூந்துகளை திருத்த முடியவில்லை என டிப்போ தரப்பில் கூறப்படுகிறது.



