மூடப்பட்டது சென்னை விமான நிலையம்! 150 விமான சேவைகள் ரத்து
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனம்பாக்கம் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை 20 செ.மீ வரை மழை கொட்டியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த விமானங்களும் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நேரம் செல்லசெல்ல ஓடுதளத்தில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் விமானத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வந்த 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓடு தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினால்தான் வழக்கமான விமான சேவைகளை இயக்க முடியும். இதனால் இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணிக்கு மேல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.
இருந்தபோதிலும் பெங்களூரு, டெல்லி, திருச்சி, கோவை, மதுரை, போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.",