நாடாளுமன்றில் பதற்றம் - கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்!
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் மற்றும் குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம் சபை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பக்கம் இருந்து திடீரென கூச்சலிட்டவாறு இருவர் சபாநாயகரை நோக்கி சென்றதோடு இரு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளனர்.
பின்னர் , உறுப்பினர்களால் அவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவல்களின்படி இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இரு நபர்களும் ‘தனா ஷாஹி நஹி சலேகி’ (சர்வாதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படாது) போன்ற கோஷங்களை எழுப்பியபடி சபைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய பா.ஜ.க உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் கூறுகையில்,
"பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களின் நோக்கம் என்ன, அவர்கள் ஏதேனும் அமைப்புடன் தொடர்புள்ளவர்களா என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,
“இரண்டு இளைஞர்கள் கலரியில் இருந்து குதித்தனர். அவர்களால் வாயு அடங்கிய குடுவைகள் எறியப்பட்டன.
அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும், ஏனென்றால் 2001ஆம் ஆண்டில் உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று நாம் அனுஷ்டித்தோம்” என்று அவர் தெரிவித்தார்.