இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

#India #SriLanka #M. K. Stalin #Fisherman #Navy
PriyaRam
5 months ago
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் 13-12-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், டிசம்பர் 13 ஆம் திகதி IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

images/content-image/2023/12/1702552454.jpg

இந்தநிலையில், அவர்கள் மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.