குஜராத்தில் மதுவிலக்கு உள்ள நிலையில் காந்தி நகர்ப்பகுதியில் மதுவிற்கு அனுமதி
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு உள்ள நிலையில் அங்குள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் மட்டும் மதுபானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கிஃப்ட் சிட்டி எனப்படும் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது. சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமாக இங்குள்ள ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் மணமகள் மன்றங்களில் மதுபானங்கள் பரிமாற குஜராத் அரசு அனுமதி அளித்திருக்கிறது.
ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படும் கிஃப்ட் சிட்டி சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீட்டார்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், உயர்பதவி நிர்வாகிகள் அதிகளவில் வருவதால் அங்கு மட்டும் மது விநியோகத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி கிஃப்ட் சிட்டி உள்ள நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மது அருந்த குஜராத் அரசு உரிமம் வழங்க இருக்கிறது. கிஃப்ட் சிட்டிக்கு வரும் விருந்தினருக்கும் மது அருந்த தற்காலிக உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் மணமகள் மன்றங்கள் மதுபானங்களை பரிமாற மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தனியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் காந்தி நகர் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் மட்டும் மதுபான பரிமாற அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.