பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

மன்னாரில் பிறந்து தமிழகத்திற்கு புலப் பெயர்ந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60ஆவது வயதில் காலமானார். அவருடைய சென்னை வீட்டில் திடீரென மயங்கி விழுந்து அவர் காலமாகியுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்னை வந்த போண்டா மணி 1991 ஆம் ஆண்டு பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தனியாகவும், வடிவேலுவின் காமெடி குழுவோடு சேர்ந்து இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் பரவ, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மேற்பார்வையில் முறையான சிகிச்சையும் பிரபலங்களின் பண உதவிகளும் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமான நிலையில் கடந்த ஒரு வருடமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று இரண்டு நாட்கள் டயாலிசிஸ் மட்டும் செய்துகொண்டே, படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
நேற்று காலை டயாலிசிஸ் செய்து வீடு திரும்பிய போண்டாமணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சுய நினைவை இழந்து மயங்கி விழுந்த நிலையில், அவரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்க்கையில் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது.
அவருக்கு திரைப்பட பிரபலங்கள், உள்ளிட்ட இரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



