புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு!
புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று மாலை வெடிவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இதன்காரணமாக உயிர்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை, குறிப்பாக புதுடில்லியில் உள்ளவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 5:20 மணியளவில் புதுடில்லி தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஜனவரியிலும் புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே யாருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் பதிவானது.
எனினும், இந்த குண்டுவெடிப்பை பயங்கரவாத சம்பவமாகவே கருதுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.