திரையுலக பிரபலங்களின் இரங்கல் செய்தி தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு....

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
இயக்குநர் பாரதிராஜா: எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி.ராஜேந்தர்: அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராக உதயமாகி, புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த்.
ஏ.ஆர்.முருகதாஸ்: அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
விக்ரம்: மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். மிஸ் யூ கேப்டன்.
நடிகை த்ரிஷா: கேப்டன் உங்கள் இரக்க குணத்தை எப்போதும் நினைவு கூர்வேன். பா.ரஞ்சித்: ஆழ்ந்த இரங்கல்கள். மிஸ் யூ. மாரி செல்வராஜ்: அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்.
ஆர்ஜே பாலாஜி: ‘விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்’. இதைச் சொல்ல நீங்கள் திரையுலகில் இருக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சினிமா துறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இதை நாங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் எப்போதும் அன்பானவர், நல்லவர், தைரியமான மனிதர், தலைவர், லெஜெண்ட் என்று நினைவுகூரப்படுவீர்கள்.
நடிகர் ஆர்யா: உண்மையான கேப்டன், உண்மையில் அனைவரையும் கவனித்துக்கொண்டவர். உங்களை மிஸ் செய்வோம் சார்.
நடிகர் கவுதம் கார்த்திக்: கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கனிவான இதயம் மற்றும் எப்போதும் பெருந்தன்மை கொண்ட மனிதர். தமிழ் சினிமா உண்மையில் ஒரு அழகான ஆன்மாவை இழந்துள்ளது.



