இலங்கை மலையக மக்களை நினைவுகூர்ந்து டில்லியில் வெளியிடப்பட்டது ஞாபகார்த்த முத்திரை!
இலங்கை மக்கள் மலையகத்திற்கு வருகை தந்து 200 வருடத்தை நினைவுகூரும் வகையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் டெல்லியில் இந்திய தபால் துறை அமைச்சினால் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையின் ஏற்பாட்டிலும் நினைவு முத்திரை இன்று புதுடில்லியில் வெளியிடப்பட்டது.
நினைவு முத்திரையின் முதல் பிரதியை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு இந்திய தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் ராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஸ்ட ஆலோசகர் மதியுகராஜா இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம்,பிலிப் குமார்,அசோக் குமார், பாஸ்கர்,பிரதி பொது செயலாளர் செல்லமுத்து,வீரகேசரி பத்திரிக்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.