ஒலிம்பிக் போட்டிகளுக்கான சில அரங்கங்கள் பிரான்ஸில் தயாரற்ற நிலையில் உள்ளன
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 205 நாட்கள் மட்டுமே உள்ளன. 22 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பிரான்சில் இடம்பெற உள்ள இந்த போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்குரிய அரங்குகளை அமைப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saint-Denis நகரில் உள்ள நீச்சல் தொடர்பான விளையாட்டுகளுக்காக அமைக்கப்படும் அரங்கில் சிறிய அளவு தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி அங்கு நீர் நிரப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. தடாகத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் சோதனையிடப்பட்டது. தானியங்கி சுத்திகரிப்பு முறை சோதனையிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து அரங்குகளும் மார்ச் 1 ஆம் திகதிக்குள் கையளிக்கப்பட வேண்டும் என ஒலிம்பிக் குழு கெடு விதித்துள்ளது. அதை இலக்கு வைத்து அனைத்து ஏற்பாடுகளும் துரித வேகத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்த பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்குகளை Solideo எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சில அரங்குகளின் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு ஒரு சில அழகு மேம்படுத்தல் பணிகள் மட்டுமே மீதமுள்ளன.
அதேவேளை சில அரங்குகளின் பணிகள் பாதியைத் தாண்டவில்லை எனவும் அறிய முடிகிறது.
டிசம்பர் 31 ஆம் திகதி குறித்த Solideo நிறுவனம் தெரிவிக்கையில், 85% சதவீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.