யார்? என்ன குறைசொன்னாலும் உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றியடையும் - கே. எஸ். அழகிரி
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றியை அடையும். தமிழக அரசு எதை செய்தாலும் குறை கூறுவதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றியை அடையும்.
காரணம் , தமிழகத்தில் மிகையான மின்சாரம் கிடைக்கிறது. சாலை, ரயில் போக்குவரத்து நன்றாக உள்ளது. தொழிலாளர்கள் ஏராளமாக கிடைக்கிறார்கள். தொழில் உறவு நன்றாக இருக்கிறது. மாநில அரசு, தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறது.
சீனாவில் எப்படி ஒரு மாபெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதோ, அதேபோன்று ஒரு தொழில் புரட்சி தமிழகத்தில் உருவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். சீனாவில் பென்சியோ பின் அந்த புரட்சியை செய்தார், தமிழகத்தின் பென்சியோ பின்னாக, மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்த தொழில் உறவு மேம்படும்.
இதனால் மகத்தான வளர்ச்சி கிடைக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளர்ச்சிக்கான ஒன்று. சென்னை தலைநகரத்தில் கூட்டத்தை குறைப்பதற்காக, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக செய்யக்கூடிய ஒரு செயல். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் துணை நகரங்களை அமைக்கிறார்கள்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் நகரத்தின் வெளியில் கொண்டு வைக்கிறார்கள். இதெல்லாம் மிகவும் அவசியம். இந்த அரசு எதை செய்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே அந்த கூட்டம் சொல்வதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஒரு வேலை செய்தால், அதை குறை கூறுவது தவறு. அதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.