ஜல்லிக்கட்டில் பரிசாக உழவு இயந்திரம் வழங்க வேண்டும் - அன்புமணி
தர்மபுரி மேற்கு மாவட்ட பாமக சார்பில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், 10 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு என பார்த்தால், அந்த ஆலை தொடர்ந்து இயங்கினால், 2 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
வேலையை விட, உயிர் தான் முக்கியம். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, கார் பரிசாக வழங்குகிறார்கள். ஆனால், மாடுபிடி வீரர்கள் விவசாயிகள்தான். அவர்களுக்கு டிராக்டரை பரிசாக வழங்க வேண்டும். அதனை அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி, வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.