மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தாய்
இந்தியாவின் - பெங்களூரைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து காரில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் Mindful AI Lab நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுச்சானா சேத் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவாவில் உள்ள அடுக்கமாடி குயிடிருப்பில் கடந்த ஆறாம் திகதி முதல் தங்கியிருந்த குறித்த பெண், திடீரென அங்கிருந்து இன்றைய தினம் கர்நாடகாவுக்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து சுச்சனா சேத் வீட்டை சுத்தம் செய்யும் போது ஊழியர் ஒருவர் ஆங்காங்கே படிந்திருந்த இரத்தக் கறையைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
அதில் குறித்த பெண் மட்டுமே பெரிய பெட்டியுடன் கிளம்பியது பதிவாகியுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. விசாரணைகளை தொடர்ந்து கோவா பொலிஸாரின் எச்சரிக்கையின் அடிப்படையில், சந்தேகநபரான பெண் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐமங்கலா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
அவசரமாக கர்நாடகா திரும்ப வேண்டும் என அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்த பெண், அதற்காக வாடகை கார் ஒன்றை ஒழுங்கு செய்து தருமாறும் கோரியுள்ளார். எனினும், வாடகை காருக்கு அதிக செலவாகும் என தெரிவித்த ஊழியர்கள் விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், இந்த கோரிக்கையினை சந்தேகநபரான பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் வாடகைக் கார் ஒன்றை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர். கர்நாடகவுக்கு தப்பி சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மகன் குறித்து விசாரித்துள்ளனர்.
அதற்கு, அவர் கோவாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தனது மகன் பத்திரமாக இருப்பதாகவும், அவசர காரியாக கர்நாடக சென்றுக் கொண்டிருப்பதாகவும் கூறி, அந்த நண்பர் வீட்டின் முகவரியையும் வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், அந்த முகவரி போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக அந்த பெண் பயணித்த காரின் சாரதியை தொடர்புகொண்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படாமல் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சாரதி காரை செலுத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பொலிஸார் காரில் இருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர்.
அதில் சிறுவனின் சடலம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.