தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்களுக்கும் பொங்கல் தொகுப்பை வழங்கி பணியை ஆரம்பித்து வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் #பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.
சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் இலவச வேட்டிகள், 1 கோடியே 77 இலட்சம் இலவச சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.