மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் என்ன நடக்கிறது : சொல்லப்படாத சில உண்மைகள்!
பொதுவாக ஒரு நாடு பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்கு முக்கிய பங்காற்றுவது இளைஞர்கள் தான். எந்தவொரு நாட்டில் அதிகளவிலான இளம் தலைமுறையினர் இருக்கிறார்களோ, அந்த நாடு துரித கதியில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஒரு நாட்டின் முதுகெலும்பே இளம் தலைமுறையினர்தான் என்று சொல்லாம். அவ்வாறாக ஒரு இளம் சமுதாயத்தை, அறிவார்ந்த சமூதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
இன்று மலையகத்தை சேர்ந்த பலர் பல துறைகளில் சாதித்து வந்தாலும், சில இடங்களில் நடக்கும் , விடயங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும் வண்ணம் தான் அமைந்திருக்கிறது. இந்த பதிவு மலையக இளம் தலைமுறைக்கானது மட்டுமல்ல, இனிவரும் சந்ததியினருக்கானதும் தான். அப்படி அனைத்து வசதிகளிலும் பின்தங்கியிருக்கிற ஒரு கூட்டத்தின் பின்னணிதான் இந்த பதிவு.
மலையகத்தை பொறுத்தவரை அடிப்படை வசதிகளுக்கு பெரும்பாடுபட்டுதான் அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக அம்மக்களின் வாழ்க்கை முறை இன்னும் தலைத்தூக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று பொருளாதார வசதியின்மைதான். தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய 1000 ரூபாய் சம்பள உயர்வை கூட கஸ்டப்பட்டு, போராடி, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் கிடைக்கவேண்டியிருந்தது.
இத்தகைய கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தன்னுடைய பிள்ளைகளாவது நல்லதொரு விடியலை பார்க்கட்டும் என்ற ஆசையில், படிக்கவைத்துவிட ஆசைப்படுகிறார்கள். அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு சமூகத்திற்கு மேலதிக கொடுப்பனவுகளை செலுத்தி டீயூஸன் அனுப்புவதெல்லாம் இயலுக்கின்ற காரியமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மலையகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் பாடசாலை கல்வியை மட்டும்தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் அந்த பாடசாலைகள் முறையான கல்வியை வழங்குகிறதா?, ஆசிரியர்கள் அந்த பணியை சரியாக செய்கிறார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. மலையக மக்களின் சோகமான பின்புலம் உலகறிய தெரியாமல் எவ்வாறு மௌனித்துபோனதோ, அதேபோல் அந்த இளைஞர்களின் வாழ்க்கையும் மாறிவருகிறது.
இங்கு அமைந்திருக்கின்ற பெரும்பாலான பாடசாலைகளில், ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகின்றது. உண்மை என்னவென்றால் ஒரு காலத்தில் சாதாரணமாக உயர்தரம் படித்து சாதாரண தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலருக்கு ஆசியர் நியமனங்கள் கொடுக்கப்பட்டன. பின்பு அவர்கள் கல்லூரிகளுக்கு சென்று முறையாக ஆசியர் பயிற்சியை பெற்றுக்கொண்டார்கள்.
இருந்தாலும் அந்த காலப்பகுதியில் தகுதியற்ற ஏராளமான ஆசிரியர்கள், முக்கிய பாடங்களுக்கு பணியமர்த்தப்பட்டார்கள். உதாரணமாக உயர்த்தர பரீட்சையில் தமிழ், புவியியல், அரசறிவியல் உள்ளிட்ட பாடங்களை எடுத்த பலர், சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு பணியமர்த்தப்பட்டார்கள். தகுதியே இல்லாத சிலர் முக்கியமான பாடங்களுக்கு பணியமர்த்தப்படும்போது மாணவர்களின் நிலை என்னவாகும் என்பது முக்கிய கேள்வி? அவர்கள் சாதாரண தரத்திலேயே தோல்வியை சந்தித்து, விபரீதமான முடிவுகளையும் எடுக்க நேரிட்டதுதான் கண்கூடான உண்மை.
நாட்டில் தற்போது 35,000இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கூறுவதுபோல் இந்த விடயம் அப்படியே நடந்தால் மகிழ்ச்சிதான்.
ஆனால் மாறாக தகுதியில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். வேறு ஏதேனும் துறைகளில் இவ்வாறான விடயங்கள் நடந்தாலும், பாடசாலைகளில், ஆசிரியர் துறைகளில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறக்கூடாது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விடயங்களில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து அரசாங்கம் ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்த வேண்டும். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாடசாலைகளுக்கு செல்லும்போது ஆசிரியர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதை விட மாணவர்களிடம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்.....!