கேப்டன் மில்லர் படத்தின் திரைவிமர்சனம்

வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன்.
நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார்.
ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார்.
பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை.



