சுவிட்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்!

#SriLanka #Switzerland #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சுவிட்சர்லாந்தில் சிறப்பாக  இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்!

15.01.2024 திங்கட்கிழமை பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் காலை 08.00 மணிமுதல் மிகுசிறப்புடன் தமிழர் திருநாள் சுறவத்திங்கள் (தைத்திங்கள்) பொங்கல் தொடங்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவனரசு சார்பாளர்கள், மாநில மற்றும் நகரசபை உறுப்பினர்கள் பொங்கல்விழாவில் பங்கெடுத்து சிறப்பித்தனர். பேர்ன் நகர கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டன்ட் திருச்சபை அருட்தந்தையினர் சிறப்பு விருந்தினர்களாக வருகை அளித்திருந்தனர். பல்சமய இல்லத்தின் தலைமைப் பொறுப்பாளர் கலாநிதி. காறின் மிக்கிற்யுக், பதில் தலைவி திருமதி. லூயில் கிறாப், கணக்காய்வாளர் திருமதி ஊர்சுலா எக்லோசியா, சுவிற்சர்லாந்து விவசாயிகள் சங்கத்தின் முன்னைநாள் தலைவர் திரு. கன்ஸ்யோர்க் ஆகியோர்களும் சுவிற்சர்லாந்து பேராளர்களாக பொங்கல்விழாவில் பங்கெடுத்தனர்.

images/content-image/1705372041.jpg

. பொங்கலோ பொங்கல் என்று தமிழில் அனைவரும் கூவி கதிரவனிற்கு பொங்கற்பானையில் அரிசியிட்டு, வெண் அவிரோன் கதிரவனிற்கு நன்றி செலுத்தி பொங்கலிட்டனர். உளவள ஆற்றுகை 11.30 மணிக்கு சைவநெறிக்கூடத்தால் சுவிற்சர்லாந்து நாட்டுக்கான தமிழ் உளவள ஆற்றுகை அமைப்பு நிறுவப்பட்டு, ஆற்றுப்படுத்துனர்கள் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

 சுவிற்சர்லாந்தில் பட்டறிவு வாய்ந்த சமயபோதகர்கள் கடினமான சூழ்நிலைகளில் மக்களை கவனித்து அவர்களுக்கு அர்த்தமுள்ள மதியுரைகளை வழங்குகிறார்கள். சுவிற்சர்லாந்தில் உள்ள சீர்திருத்த மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் "ஆன்மாவைப் பராமரித்தல்" என்ற பொருளில் 750 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றுப்படுத்தல் எனும் தொண்டினை ஆற்றி வருகின்றனர். 

images/content-image/1705372061.jpg

 சுவிற்சர்லாந்தில் ஆரம்பத்தில் ஆயர்களின் பராமரிப்பில், மதகுருமார்கள் பயத்தால் பாதிக்கப்பட்ட அடியார்களை ஆன்மீகதுணைகொண்டு கவனித்து, மனவளத்தை ஆற்றுப்படுத்தும் தொண்டினை தொடங்கி வைத்தனர். இம்முறைமை கல்விரீதியில் சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் கற்கையாக கற்பிக்கப்பட்டு ஆற்றுப்படுத்தல் எனும் கற்றலாக இன்று அறியப்படுகின்றது. 

 கிறித்தவர் அல்லாதவராக முதன்முறையாக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமய ஆற்றுப்படுத்தல் பட்டயக்கல்வியினைக் கற்று நிறைந்து அன்றைய சுவிஸ் அதிபர் திருமதி. சமறுக்கா அவர்களிடமிருந்து 06. 09. 2021 பட்டயம்பெற்றிருந்தார். இன்று பேர்ன்நகரில் பல்சமயப் பல்பண்பாட்டு மன்றம் ஆற்றுப்படுத்தல் கற்கையினை பல்சமய பல்லினத்தவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. 

images/content-image/1705372165.jpg

பேர்ன் மாநில அரசும் இக்கற்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பொருள் இக்கற்கையினை நிறைவுசெய்வோர் மருத்துவமனைகளில் மற்றும் மூதாளர் இல்லங்களில் உள்ள மக்களை காலநேர வரையற்று என்றும் நேர்காணவும் உளவள ஆற்றுப்படுத்தலை வழங்கவும் வழிசெய்கின்றது. 

 கற்கை 

 சைவநெறிக்கூடத்தை சார்ந்த குருமார்கள் மூவர் முன்னரே கற்கையினை நிறைவுசெய்திருந்தனர், இந்த ஆண்டு நால்வர் கற்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இவர்களை உள்ளடக்கி «உளவள ஆற்றுகை» எனும் ஆற்றுப்படுத்தல் நிறுவகம் பொங்கல் திருநாளில் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சுவிற்சர்லாந்து உளவள ஆற்கை பேராளர். திரு. பஸ்கால் மோஸ்லி மற்றும் திரு. பிலிப் கோனிக் ஆகியோர் திரு. தர்மலிங்கம் சசிக்குமார், திரு. திருச்செல்வம் முரளிதரன், திரு. குழந்தை விக்னேஸ்வரன் ஆகியோருக்கு வருகை அட்டை (விசிற்ரிங்காட்) வழங்கி தமிழ் மொழியில் ஆற்றுப்படுத்தல் தொண்டமைப்பினை தொடங்கி வைத்தனர். 

 பேர்ன் மாநிலத்தின் சமய அலுவல் ஆணையர் திரு. தாவித் லொயிற்வில்லெர் சிறப்பு விருந்தனராக பங்கெடுத்து சிறப்புரை ஆற்றினார். சுவிசில் வாழும் தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் ஆவர். இம்மக்களுக்கு உள்ள அடிப்படைத் தேவைகளில் உளவள ஆற்றுகையும் ஒன்று, இன்று முதலாவதாக நாம் ஓர் அடி எடுத்துவைத்துள்ளோம். மேலும் பல ஏற்றங்கள் சைவநெறிக்கூடம் காண்பதற்கு தனது வாழ்த்துக்களை நவின்றார். 

 சுவிற்சர்லாந்து நாட்டவர் அனைவருக்கும் பொங்கலும் ஈழத்தமிழ் உணவு சிறப்பு விருந்தாக அளிக்கப்பட்டது, அனைத்து அடியவர்களுக்கும் மகேச்சுர வழிபாட்டுடன் சிறப்பு அருளமுது வழங்கி முற்பகல் வழிபாடுகள் நிறைவுற்றது. 

 ஐயப்பன் சிறப்பு படிவழிபாடு 

 மாலை 16.00 மணிமுதல் தமிழ் வேள்வியுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சுடரோன் கதிரவன் கொடுநுகம் (மகரசங்கராதி) வழிபாடும் ஐயப்பன் சிறப்பு படிவழிபாடும் மாலை இடம்பெற்று இறைதிரு உலா ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்றது. சுவிற்சர்லாந்தில் பிறந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பினையும் தமிழர் திருநாள் பொங்கல் விழாவினையும் நினைவில் பதியவைக்கும் வகையில் பொங்கல்பரிசுகள் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் பெருமையும் பொங்கல் திருநாள் பண்பாட்டுத் தோற்றமும் பரவலும் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரைக்கப்பட்டு வழிபாடுகள் நிறைவுற்றது.