கோடிக் கணக்கில் செலவழித்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது சரிதானா?
உலகின் பெரும்பாலான பகுதிகள் இயற்கை காரணிகளாலும், போர் போன்ற மனித நடவடிக்கைகளால் அழிந்துள்ளன. அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சில நாடுகளில் அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள தாக்கம் பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. மக்கள் வாழ வழியின்றி பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
அவ்வாறு புலம்பெயர்பவர்களின் முதல் தெரிவு ஐரோப்பிய நாடுகள் தான். பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளை நோக்கியே தற்போது மக்கள் படையெடுகின்றனர்.
இதனால் அந்நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அந்நாடுகள் புலம்பெயர்வு குறித்த மசோதாக்களை கடுமையாக்கி வருகின்றனர். அதேநேரம் புலம்பெயர்வோரை நாடுகடத்தும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
இதற்கமைய பிரான்ஸில் சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கூட நாடுகடத்தப்படும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான முக்கிய காரணம் அந்நாட்டில் நிறைய உழைக்கலாம். தற்போது உள்ள சிக்கல்களை எளிதில் கையாளலாம் என்ற ஒரு எண்ணப்பாடுதான்.
இதனால்தான் பலர் போலி முகவர்களை நம்பி பெருமளவிலான பணத்தை கொடுத்து சட்டவிரோதமான பயணங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் தங்களுடைய உயிரை கூட இடைநடுவில் தியாகம் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இவை ஒரு புறம் என்றால் பலர் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் சட்டபூர்வமாக கூட வேறு நாடுகளுக்கு செல்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும் வட்டிக்கு பணம் பெற்று அதை முகவர்களுக்கு கொடுப்பதன் மூலம், பணத்தையும் இழக்கின்றனர். பின்பு அந்த வட்டியை கட்டுவதற்கு அதிகளவு சிரமங்களை எதிர்கொள்வதும், கடன் சுமை தாங்காது தற்கொலை செய்துகொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், எல்லா பிரச்சினைகளையும் தாண்டி ஐரோப்பிய நாட்டிற்கு செல்பவர்கள் அங்கு நிம்மதியாக இருக்கிறார்களா? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்க்கை செலவு அதிகரித்து வருகிறது. ஆகவே நீங்கள் அங்கு சொகுசாக வாழவோ, அல்லது சாதாரண ஒரு வாழ்க்கையை வாழவோ இரண்டு வேலைகளையாவது தேடிக்கொள்ள வேண்டும்.
அங்குள்ள காலநிலைக்கு பழக்கப்படுவது மிகவும் சிரமமாக இருக்கலாம். இதற்கு மத்தியில் உங்களுக்கான ஒரு இருப்பிடத்தை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வீடற்றவர்களாக குளிரில் செத்து மடிய நேரிடம். இப்படி பல கஸ்டங்களை அனுப்பவிக்க நேரிடுகிறது.
ஆகவே எல்லாவற்றையும் சிந்தித்து செயற்படுவது சால சிறந்தது....!