தமிழகத்தின் வனப் போக்குவரத்து பாதையில் தீவனம் தேடிய யானை - வைரல் காட்சி

#India #Tamil Nadu #Elephant #Food #Forest
Mugunthan Mugunthan
7 months ago
தமிழகத்தின் வனப் போக்குவரத்து பாதையில் தீவனம் தேடிய யானை - வைரல் காட்சி

சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் வரும் வாகனங்களில் காய்கறிகள், தீவனம் உள்ளதா என காட்டு யானை தேடி அலைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம் – கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது. 

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சாலை வழியாக பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில், அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை சாலை நடுவே நடமாடியதால், யானையைக் கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர். 

வாகனங்களை வழிமறித்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள் ஏதாவது உள்ளதா என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி தீவனம் தேடி அலைந்தது. இந்த காட்சியை அவ்வழியே சென்ற அரசு பேருந்தில் இருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். 

சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.