உலகம் முழுவதும் பரவும் விவசாயிகள் போராட்டம். காரணத்தை தேடுகிறது ஐரோப்பிய மாநாடு.

இன்று வியாழக்கிழமை பெல்ஜியத்தின் Brussels நகரில் இடம்பெற உள்ள ஐரோப்பிய கூட்டத்தில் (Conseil européen) விவசாயிகளின் பிரச்சனை ஆய்வுக்குட்படுத்தப்படும் என அறிய முடிகிறது.
பிரான்சில் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டம், தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பரவி, ஐரோப்பாவின் பிரச்சனையாக மாறியுள்ளது. நெடுஞ்சாலைகளை முடக்கி அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று ஐரோப்பிய கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.
இந்த கூட்டம் பிரதானமாக உக்ரேன் பிரச்சனை தொடர்பாக கலந்தாலோசிக்க ஏற்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதும், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, ரொமேனியா, பெல்ஜியம் இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் போராட்டங்களினால் தற்போது அதுவும் ஐரோப்பிய கூட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen உடன் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனிப்பட்ட முறையிலும் உரையாடுவார் எனவும் அறிய முடிகிறது.



