திருப்பதியில் சிங்கத்துடன் புகைப்படம் எடுக்க முயன்ற நபர் மரணம்
திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பார்வையாளர்களை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்றி, சிங்கத்தை கூண்டில் அடைத்தனர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம்.
இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார்.
இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது.
இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார்.
ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.