ஐரோப்பிய ஒன்றியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ரெட்பிளவர் அக்ஷன் திரில்லர் படம்
நடிகர் விக்னேஷ் 2 வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘ரெட் ஃப்ளவர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். இவர், விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர். மனிஷா ஜஷ்னானி ,ரஷ்ய நடிகர்கள் ஆண்ட்ரே இலபிச்சேவ், மெஹ்தி ஷா, நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, "ஆக் ஷன் த்ரில்லர் படமான இதன் கதை, இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேலைச் சுற்றி சுழல்கிறது.
இந்திய ராணுவத்தில் சேர்வதில் ஆர்வமுள்ள 2 பாத்திரங்களில் விக்னேஷ் நடிக்கிறார். மூன்றாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய யூனியன் அதிகாரமிக்க வல்லரசாக உருவெடுக்கிறது. உலக நாடுகள் மீது அதிக வரி விதிக்கிறது, படையெடுப்பு அச்சுறுத்தலையும் விடுத்து, பதற்றமான சர்வதேச சூழலை உருவாக்குகிறது.
இதை எதிர்கொள்ள துணிச்சலான ரகசிய நடவடிக்கையை இந்திய அரசு திட்டமிடுகிறது. அதை இரட்டை சகோதரர்கள் முறியடித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடியில் இருந்து இந்தியாவைக் காக்க எவ்வாறு உதவுகிறார்கள் என்பது கதை.
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது" என்றார். கே.தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் ராம் இசை அமைக்கிறார். இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.