எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமாகி வெளிவரும் புதிய படம் வடக்கன்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’.
குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார். ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதியுள்ளார். படம் பற்றி பாஸ்கர் சக்தி கூறியதாவது: வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உட்பட சுமார் 10 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.
அழகர்சாமியின் குதிரை படத்துக்குக் கதை, வசனம் எழுதி இருக்கிறேன். ‘வடக்கன்’ மூலம் இயக்குநர் ஆகிறேன். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகிறார்கள்.
கிராமங்களில் கூட வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றிய ஒரு பார்வை எல்லோருக்கும் இருக்கிறது. சமூகத்தில் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதை அரசியலாக இல்லாமல் பொழுதுபோக்காகவும் நகைச்சுவையாகவும் இதில் சொல்லியிருக்கிறேன்.
அதாவது ஒரு சமூகப் பிரச்சினையை, எளிய மனிதர்களின் பார்வை வழியாக அலசும் படம் இது. இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான படம் என்று கருதுகிறேன். தேனி பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் முழுவதும் லைவ் ரெக்கார்டிங் செய்திருக்கிறோம். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா இதில் நடிகராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு பாஸ்கர் சக்தி கூறினார்.