சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்திய இந்திய அரசு!
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அறிவிப்புகள் நேற்றைய (12.03) தினம் வெளியிடப்பட்டன. இந்த குடியுரிமை சட்டத்தில் முஸ்லீம் அல்லாத பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த மசோதா 2019 இல் நிறைவேற்றப்பட்டது, இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமூகம் கடுமையாக எதிர்த்தது. அப்போது பெரும் கலவரங்கள் இடம்பெற்ற நிலையில், பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த சட்டத்தை இந்திய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. எவ்வாறாயினும் இந்த சட்டமூலத்தை அமுற்படுத்த மாட்டோம் என தமிழகத்தின் தி.மு.க அரசு கூறியுள்ளது.
இதேவேளை இதற்கு எதிராக அசாம் மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்துடன் இந்த போராட்டங்கள் கலவரங்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதால் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரம் இல்லாமல் போராட்டங்களை கைவிடாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.