மும்பையில் 100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு
மும்பையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இரு வெளிநாட்டு பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட சர்வதேச கடத்தல் கும்பல் சிக்கியது.
தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த இரு பெண்கள் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில்வந்தனர்.
இவர்களை மும்பை வருவாய் புலனாய்வு (DRI) பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் இருவரிடமிருந்தும் ரூ.100 கோடி மதிப்பிலான 9.82 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இருவரும், டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இவற்றை கைமாற்ற முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் பதுங்கியிருந்த அந்த கும்பலைப் பிடிக்க DRI பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அந்த கும்பலின் நடவடிக்கையை கண்காணித்தது.
மற்றொரு குழு, உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் அவர்களை நெருங்கியது. அப்போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை, சமூக விரோத கும்பல் தாக்கியது. இதில் DRI பிரிவு அதிகாரிகள் லேசான காயமடைந்தனர்.
எனினும் இந்த நடவடிக்கையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய தலைவன் மற்றும் அவனது கூட்டாளிகள் என 4 பேரை அதிகாரிகள் பிடித்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் எத்தியோப்பியா, இலங்கை, நைஜீரியா ஆகிய நாடுகளில் போதைப் பொருள் வினியோகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.