IPL - சாதனையுடன் வெற்றி பெற்ற ஐதராபாத்
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா,கிளாசென் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.
ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன்கள், அபிஷேக் சர்மா 63 ரன்கள், ஹெட் 62 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதில் ரோகித் 26 ரன்களிலும், இஷான் கிஷன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாடினர். ஆனால் யாரும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்லவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் 246 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக உடன்கட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.