கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அலட்சியமாக இருந்துள்ளது - மோடி குற்றச்சாட்டு!
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்படுவதில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் அலட்சியமாக செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசினால் கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட உண்மைகளை கருத்திற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தகவல்களின் படி கச்சத்தீவை காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் அலட்சியமாக இலங்கைக்கு தாரை வார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இது ஒவ்வொரு இந்தியனையும் கொதிப்படையச் செய்யும் சம்பவம் என்றும், இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே கச்சத்தீவு குறித்த தலைப்பு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், இப்பிரச்னைக்கு இந்திய அரசு உறுதியான தீர்வு காணாததை கண்டித்தும் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தமிழக மீனவர் சங்கங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.