எந்தக் காரணத்திற்காகவும் தேர்தலை பிற்போட முடியாது: தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள்

#SriLanka #Election
Mayoorikka
2 years ago
எந்தக் காரணத்திற்காகவும் தேர்தலை பிற்போட முடியாது: தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள்

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாதென தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்களான நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ஆகியன தெரிவித்துள்ளன.

 ஜனாதிபதி தேர்தலா, பாராளுமன்ற தேர்தலா முதலில் நடைபெறும் என்பது தொடர்பில் குழப்பமான நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் முறைமை மாற்றமும் அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தன. 

அவ்வமைப்புக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கின்ற தருணத்தில் தான் எமது ஆட்சியாளர்களுக்கு தேர்தல் முறைமை மாற்றம் சம்பந்தமான சிந்தனைகள் வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலையும் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலையும் அரசியலமைப்புக்கு அமைவாக முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றேன்.

 தற்போது தேர்தல் முறைமை மாற்றம் என்பது அமைச்சரவையை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரமுறையவர் தமது அதிகாரத்தினை விஸ்தரித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். தற்போதைய நிலையில், நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகிய இரண்டையும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் காணாமலாக்கியுள்ளது.

 ஆகவே அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்னதாக இந்தத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. அரசாங்கம் மேற்படி இரண்டு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அக்கறை கொள்ளாதிருக்கிறது. அதேநேரம், பாராளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. 

அதனடிப்படையில் தற்போதைய சூழலில் அவரால் எந்த நேரத்திலும் அவரால் பாராளுமன்றத்தினை கலைக்க முடியும். அவ்வாறு இல்லையேல் 2025 வரையில் கொண்டுசெல்லவும் முடியும். ஆனால், ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம், செப்டெம்பர் 17இல் இருந்து ஒக்டோபர் 17க்குள் நடத்த வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போதைய ஆட்சியாளர்கள் எப்படியாவது அதனை நடத்தாது இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.

 மறுபக்கத்தில் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பித்தும் உள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் அரசியலமைப்பை மீறி தேர்தலை பிற்போட முடியாத நிலைமைகள் உள்ளது. ஆகவே, ஜனாதிபதி தேர்தல் எந்த காரணத்துக்காகவும் நடத்தாது கைவிட முடியாது என்றார்.

 நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தினை மேற்கொள்வதற்கு இரண்டரை வருடங்கள் சென்றிருக்கின்றன. 

 ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதன் ஊடாக தேர்தல் முறைமையை மாற்றியமைக்க முடியும். எல்லை நிர்ணயம் தொடர்பான முடிவுகளுக்கு அரசியல் கட்சிகளால் இணக்கம் தெரிவிக்க முடியாத நிலைமைகளும் ஏற்படும்.

 இவ்வாறான நிலையில் பாராளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பதற்கான எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாவிட்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்படும். அவ்வாறில்லையாயின், சுயாதீனமாக பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் முயற்சியாகவும் அமையலாம்.

 எனினும், அரசியலமைப்புக்கு அமைவாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தியேயாக வேண்டும். அதனை பிற்போடுவதற்கு எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது. ஆகவே ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான வழிகள் எவையும் இல்லை என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4