IPL - 223 ஓட்டங்களை குவித்த கொல்கத்தா அணி
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சால்ட் 10 ரன்னிலும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரசல் களம் இறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரேன் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இதில் ரசல் 13 ரன்னிலும் , அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் 109 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக நரேன் 109 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆட உள்ளது.