IPL - 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே டெல்லியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் இந்த இணை 125 ரன்கள் குவித்து அசத்தியது. ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரைசதம் அடித்த நிலையில் மறுபுறம் அபிஷேக் சர்மா 46 ரன்னிலும், மார்க்ரம் 1 ரன்னிலும், க்ளாசென் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெட் 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அப்துல் சமத் 13 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய ஷபாஸ் அகமது அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 16 ரன்களிலும் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஜேக் பிரேசர் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஜேக் பிரேசர் அரைசதம் கடந்து 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அபிஷேக் போரெல் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 199 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.