இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்

நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி, கேரளா மற்றும் மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சென்னை விமான நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த நடிகர் விஜயை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.




✈️ @actorvijay pic.twitter.com/idE9hOXZJv
— Sonia Arunkumar (@rajakumaari) May 11, 2024