அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எந்த முன்நகர்வும் இல்லை - மனோ கணேசன் சுட்டிக்காட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எந்த முன்நகர்வும் இல்லை - மனோ கணேசன் சுட்டிக்காட்டு!

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி  சிரி வோல்ட்டிற்கும், மனோ கணேசனுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பு குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  "நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மலையக சமூகத்தைச் சார்ந்த பெருந்தோட்டப் பிரிவினரின் வாழ் நிலைமை ஆகியவை பற்றி சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட், அரசியல்துறை முதலாம் செயலாளர் ஜஸ்டின் பொய்லா ஆகியோரும், நானும் மிக விரிவாக உரையாடினோம். 

 உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய மசோதா மூலம் இலங்கை அரசு கொண்டுவர முயலும் உண்மை ஆணைக்குழு பற்றி பேசினோம். 

ஆனால், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை. 

இவை இத்தனை தூரம் இழுப்பட்டுப் போவதற்குச் சர்வதேச சமூகமும் காரணமாக அமைந்து விட்டது. ஆகவே, இலங்கை தொடர்பான இதுவரையிலான உலக சமுதாயக் கொள்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என நான் கோரியுள்ளேன். 

மேலும், மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில், இந்நாள் வரை இழந்த அரசியல் சமூக உரிமைகளை மீளப்பெற சுவிட்சர்லாந்து எமக்கு உதவ வேண்டும். 

மலையகத் தமிழர் இந்நாட்டில் சுமார் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் சிறுபான்மையினர் என்றபடியால், அரசியல் யாப்பு ஏற்பாடாக நிலவரம்பற்ற சமூக சபை அமைக்கப்பட வேண்டும் என நாம் முன்மொழிவு செய்து வருகின்றோம்.

 எமது இந்த முன்மொழிவுகள் செம்மையாக்கப்பட வேண்டும். அதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டின் நிலவரம்பற்ற சிறுபான்மையினருக்கு வழங்கபட்டுள்ள அதிகாரப் பகிர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4