சர்ச்சையில் சிக்கிய இந்திய யூடியூபர் இர்பான்
தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ஒவ்வொரு ஊர் மற்றும் நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் உணவு வகைகளை ருசி பார்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவரது யூடியூப் பக்கத்தில் 40 லட்சம் பேர் வரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இர்பான் துபாயில் தனது மனைவிக்கு பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தை இதுதான் என விழா நடத்தி அறிவித்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை பரிந்துரைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், காவல் துறையில் புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் பாலினம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படாவிட்டாலும், அதனை வீடியோ மூலம் பொது வெளியில் அறிவித்தது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில்தான் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.