இந்திய மக்களவைத் தேர்தல்: இதுவரை வெளியான முடிவுகள்

#India #Election #D K Modi
Mayoorikka
3 months ago
இந்திய மக்களவைத் தேர்தல்: இதுவரை வெளியான முடிவுகள்

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் 8.30 மணிக்கு இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 287 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 206 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை 3,335 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5127 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 7,103 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

அங்கு திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 18,569 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 40,037 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 1,00,174 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் 1,05,856 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 73,622 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன், தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது வரை 141 வாக்குகள் பெற்றுள்ளார்.