குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!

#India #fire #Kuwait
Mayoorikka
1 month ago
குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். 

 மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

 தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் விபத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

 தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலரது உடல் அடையாளம் காண முடியாதப்படி கருகியுள்ளதாக கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 43 இந்தியர்களில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

 குவைத் தமிழ்ச்சங்கம் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமு, பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய், முகமத ஷெரிப், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.