கனடாவின் கொலம்பிய மாகாணத்தில் பதிவான நிலநடுக்கங்கள்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் கரையோர பகுதிகளில் இவ்வாறு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
6.4 ரிச்டர் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.
முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுப் பகுதியில் கரையோரங்களில் சில நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின் மா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வருடம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகின்றன எனவும் அதில் அனேகமானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி நில அதிர்வு இடம் பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது உசிதமானது என அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.