இலங்கையில் அடிக்கடி பதிவாகும் நிலநடுக்கங்கள்: காரணம் என்ன?
இலங்கையில் அண்மைக் காலமாக அடிக்கடி நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
அளவுகோலில் 2.7 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்திலிருந்து கிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி வவுனியா பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, பூமியின் உட்பகுதியில் உள்ள விரிசல்களின் சிறு அசைவுகளினால் ஏற்படும் அதிர்வுகளே இவ்வாறான நிலநடுக்கத்திற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர்கள் என்ற அடிப்படையில் மிக மெதுவாக உயர்வடைவதே இவ்வாறான இயக்கங்களுக்குக் காரணமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடத்துக்கு இடம் உயர்வடையும் அளவு மாறுபடுகின்ற போதிலும் நிலத்தடி செயல்பாடு அதிகமாக இருக்கும் பல இடங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் உள்ள கனிம வளங்களின் அடிப்படையில் அவ்வாறான இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது எனவும், நில உயர்வினாலேயே இந்த சிறிய அதிர்வுகள் ஏற்படுகின்றன எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.