பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!
பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இன்றிரவு 11 மணிக்கு 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.
கால்பந்தாட்டம், றக்பி உள்ளிட்ட போட்டிகள் புதன்கிழமையே (24) ஆரம்பித்துள்ளபோதும் 206 தேசங்களின் பங்குபற்றுதலில் 32 வகையான விளையாட்டுக்களிலிருந்து 329 வகைப் போட்டிகளில் 10,714 வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கின்ற இப்போட்டிகள் அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
முதன்முறையாக அரங்கத்துக்கு வெளியே ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், ஆறு கிலோ மீற்றர் நீளமான சென் ஆற்றில் படகுகளில் வீரர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இலங்கையானது அறுவரால் 19ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
ஈட்டி எறிதல் வீராங்கனையான டில்ஹானி லெகம்கே, பூப்பந்தாட்ட வீரரான விரென் நெட்டசிங்கவால் தலைமை தாங்கப்படும் இலங்கைக் குழாமில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவும், ஆண்களுக்கான 100 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் கைல் அபேசிங்கவும், பெண்களுக்கான 100 மீற்றர் பின்பக்கமாக நீந்தும் போட்டியில் கங்கா செனவிரத்னவும் இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக்கென்றாலே கவனம் பெறுவது ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியே என்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் கவனம் பெறுகிறார். இவருக்குப் போட்டியாக ஜமைக்காவின் கிஷேன் தொம்ஸன் இருப்பார் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை தனது இறுதி ஒலிம்பிக்கில் போட்டியிடும் ஜமைக்காவின் ஷெலி-அன் பிறேஸர் பிறைஸும் கவனம் பெறுகிறார். தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 100 மீற்றரில் பதக்கம் பெறும் கனவுடன் 37 வயதான பிறேஸர் பிறைஸ் களமிறங்குகின்றார். இவருக்குப் போட்டியாக இவரின் சக ஜமைக்கா வீராங்கனையாக ஷெரிக்கா ஜக்சன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கடந்த முறை 100, 200 மீற்றர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்காவின் எலைன் தொம்ஸன்-ஹெரா காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை..
இந்நிலையில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சுவீடனின் அர்மன்ட் டுப்லான்டிஸ் தங்கம் வெல்வது உறுதியாய் தெரிகின்ற நிலையில் அவர் புதிய உலக சாதனையை மீண்டும் படைப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.
தவிர பெண்களுக்கான 1,500 மீற்றர் மற்றும் 5,000 மீற்றர் போட்டிகளில் கென்யாவின் பெய்த் கிப்யெகொன் கவனம் பெறுவதுடன், 1,500, 5,000, 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளுடன் இம்முறை மரதனோட்டப் போட்டியையும் நெதர்லாந்தின் சிஃபான் ஹஸன் குறிவைத்துள்ளார்.
இதேவேளை ஆண்களுக்கான மரதனோட்டப் போட்டியில் கென்யாவின் எலியுட் கிப்சோஞ்சே தனது முன்னாள் எதியோப்பிய போட்டியாளரான கென்னிஸா பெகெலேயிடமிருந்து போட்டியை எதிர்நோக்குகிறார்.
இந்நிலையில் கடந்த முறை ஆண்களுக்கான உயரம் பாய்தலுக்கான தங்கப் பதக்கத்தை இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரியும், கட்டாரின் முடாஸ் எஸ்ஸா பர்ஷாமும் பகர்ந்த நிலையில் இம்முறையும் இருவரிடையேயும் போட்டி நிலவுகின்றது.
இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி, அவுஸ்திரேலியாவின் அரியர்னே டிட்மஸ், கனடாவின் சம்மர் மக்கின்டொஷ்டமிருந்து போட்டியை எதிர்நோக்குகின்றார்.
இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் மீண்டும் பாகிஸ்தானின் அர்ஷாட் நதீமிடமிருந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா போட்டியை எதிர்நோக்குகின்றார்.