கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிக்கும் பராக் ஒபாமா
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர்.
இதனால் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வாரம் நானும், மிச்சலும் எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார்.
நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.