ரஜினியை நடிகனாக்கிய மகேந்திரன் - எப்படிப்பட்டவர் தெரியுமா?
ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே ஜாதி சங்கத் தலைவர்களாக மாறும் இயக்குனர்கள் மத்தியில், தன்னுடைய படங்களில் ஜாதி அடையாளத்தை மறைமுகமாகக் கூடக் காட்டாதவர் இயக்குநர் மகேந்திரன்.
கடைசிவரை தமிழ் ரசிகர்களிடம் தான் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதையும் அடையாளப்படுத்தாத மிகச் சிறந்த மனிதர் இவர்.
95லிருந்து அவருடன் எனக்குப் பழக்கம். மிக நெருக்கமாக 10 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். வாரத்தில் 2 நாட்களாவது அவரைச் சந்தித்துப் பேசிவிடுவேன். சந்திக்காத நாட்களில் தொலைபேசியில் பேசுவோம்.
நாங்கள் பேசாத விடயங்கள் இல்லை. 2005 ல் ஒருநாள் அவருடன் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தால் தொலைபேசியில் பேசிக் கொள்வதைக் கூடத் தவிர்த்து விட்டோம்.
அதன் பிறகு இன்றுதான் அவரின் புது வீட்டுக்கே சென்றேன். அவரை உயிரற்றவராகப் பார்ப்பதற்கு எனக்குத் தைரியம் இல்லாததால் வாசலிலேயே நின்று இருந்தேன். அடக்கம் செய்த இடத்திலும் தள்ளியேதான் நின்றேன்.
மெட்டி விஜயகுமாரி, உதிர்ப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி இந்தக் கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியான குணாம்சம் கொண்டவை. அவர்கள் அன்பானர்கள், யார் மீதும் வெறுப்பில்லாதவர்கள்.
இந்தப் பெண் பாத்திரங்களில் இருந்தது ஒரு ஆணின் குணாம்சம். அந்த ஆண்தான் இயக்குநர் மகேந்திரன்.