கிளிநொச்சி-கண்டாவளையில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பண மோசடி

#SriLanka #Kilinochchi #Bank #money #samurthi #Fraud
Prasu
3 months ago
கிளிநொச்சி-கண்டாவளையில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பண மோசடி

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4 விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை சமுர்த்தி வங்கிக் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை எழுமாறான முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே குறித்த வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சமுர்த்திக் கிளையின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் வங்கிக் கிளை பொறுப்பெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு பிரிவு, சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்ட கணக்காய்வுப் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலக உள்ளக கணக்காய்வுப் பிரிவு, மாவட்டச் செயலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் என நான்கு குழுக்கள் நேற்றைய தினம் கணக்காய்வினை ஆரம்பித்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வங்கிக் கிளையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதைத்தொடர்ந்து மேலும் ஆராய்ந்த பொழுது இன்னும்; பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தா கரன் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வு தொடர்பான விசாரணைகள் முடிவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் சிலரும், 3 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முறைகேட்டுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயனாளிகளின் கையொப்பமின்றி வங்கி கணக்கிலிருந்து பணம் மீளப்பெற்றுக்கொண்டமை, கையொப்பங்கள், கைநாட்டுக்களை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்தமை, பயனாளிகளின் அனுமதி மற்றும் சம்மதமின்றி வங்கிக் கடன்களை பெற்றுள்ளமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதுவரை அடையாளம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன்களுக்கு மேல் முறைகேடு இடம்பெற்றுள்ளமையை உறுதி செய்யக்கூடியதாக உள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சில உத்தியோகத்தர்கள் விசாரணைகள் முடியும்வரை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரைணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பயனாளிகளை சில உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக யாரேனும் அச்சுறுத்த முற்பட்டாலோ அல்லது வேறு ஏதும் வழிகளில் அச்சுறுத்த முனைந்தாலோ தமக்கு தெரிவிக்குமாறு கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தா கரன் தெரிவித்துள்ளார். 

மேலும், வங்கி கொடுக்கல்வாங்கல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது சாட்சியங்கள் இருப்பின் தனக்கு முறைப்பாடு செய்யமாறும் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

குறித்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது கணக்காய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அதன் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவிக்கின்றார். 

 இந்த மோசடி மற்றம் முறைகேடு தொடர்பாக அறிக்கை கிடைத்த பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுவதுடன, முறைப்பாடுகள் இருப்பின் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலகத்துக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!