வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்கும் முகமது யூனஸ்
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார்.
அவர் தற்போது இந்தியாவில் உள்ளார். லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளதாக ராணுவத் தலைமை தளபதி அறிவித்துள்ளார்.
பிரதமர் என்ற பதவி இல்லாமல் தலைமை ஆலோசகர் என்ற பதவியுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஆட்சி செய்ய உள்ளது முகமது யூனஸ் தலைமையில் 15 உறுப்பினர்களுடன் வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது.
84 வயதாகும் முகமது யூனஸ், ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.