Pledge to Restore Foundation மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பால் நான்கு குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகிய தென்னவன் மரபு அடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது, சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.
திருகோணமலை நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் வசித்து வருகின்ற பொதுமக்கள் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்த பின்னராக போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் தினமும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமது வாழ்க்கையை நடத்திவந்த இந்நிலையில் அம் மக்களுக்கான உதவித்திட்டமாக இது அமைந்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் ஊடாக Pledge to Restore Foundation இன் நிதி அனுசரணையில் இவ்வீடுகள் நிருமாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப் பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் குணநாதன், Pledge to Restore Foundation இன் அமைப்பின் ஸ்தாபகரும் தேசிய இயக்குனருமாகிய (அவுஸ்ரேலியா) திரு.உதயன் பத்மநாதன், ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் செயலாளர் திரு.ஜே.ரி. பிரவின், மற்றும் திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்தனர்.
மேலும் இதன்போது தென்னைவன் மரபு அடி கிராம உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஏனைய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், குறித்த கிராமத்தினை சேர்ந்த பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
மக்களின் நிலை அறிந்து தாமாகவே முன் வந்து அவர்களுக்குரிய வீடுகளை நிர்மாணித்து கொடுத்த Pledge to Restore அமைப்பினருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பிற்கும் இதன் போது பயனாளிகள் தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.