ஜனாதிபதி தேர்தல் : வாக்காளர் ஒருவருக்காக செலவிடப்படும் தொகை தொடர்பில் வெளியான தகவல்!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று (19.08) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (17.08) இடம்பெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் ஐம்பது காசுகள் முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஒரு வாக்காளருக்குச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகை, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்.
இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வேட்பாளர்கள் ஐம்பது காசுகள் முதல் ஆயிரம் ரூபா வரையிலான பெறுமதியான கோரிக்கைகளை முன்வைத்ததாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று வெளியிடப்பட உள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் கொள்கைகளை நாட்டுக்கு அறிவிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள விவாதத்திற்கு இரண்டு வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Pafrel அமைப்பு தெரிவித்துள்ளது.
"6 வேட்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் வேட்பாளரும் அழைக்கப்பட்டுள்ளார். இருவர் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கிறார்கள். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.