கடந்த கால பொருளாதார சீரழிவை புலப்படுத்தவா ரணில் காஸ் சிலிண்டரை தேர்ந்தெடுத்தார்?
முறையான பொருளாதார மாற்றம் இன்றி அரசாங்க வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு நிமிடம் ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் “AskRanil” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துவெளியிட்ட அவர், "எடுக்க யாரும் இல்லாத போது நான் இந்த நாட்டைக் கைப்பற்றினேன். பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று எல்லோரும் சொன்னார்கள்.
இப்போது அதற்கு தீர்வு காணப் போகிறோம். நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாம் அதை குறிப்பாக ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் தெரிவு செய்யப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "சுயேச்சையாக இருக்க முடிவு செய்தேன். கட்சி பிளவை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி இன்று ஏற்பட்டுள்ளது. அதனால் சுயேட்சையாக வர முடிவு செய்தேன். பிறகு எந்த அடையாளத்தையும் காணலாம். அந்த நேரத்தில் காஸ் சிலிண்டர் தான் சிறந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.