கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் - போராட்டத்தில் கலந்துகொண்ட சவுரவ் கங்குலி
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல.
எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.